search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கின்னஸ் சாதனை"

    • முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருந்துள்ளது.
    • முந்தைய சாதனையாளரான மோச்சியின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.

    அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை உரிமையாளர்கள் அறிந்தனர். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்ததால் கின்னஸ் சாதனையில் போட்டியிட உரிமையாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

    முந்தைய சாதனையாளரான மோச்சி என்கிற நாயின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.

    அப்போதுதான், முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருப்பதாகச் சொன்னார்கள். இதை அறிந்தவுடன் ராட் மற்றும் கிரிஸ்டல் ஆகியோர் இது தங்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக கருதி விண்ணப்பித்தனர்.

    இதற்கான சமர்ப்பிப்பு செயல்முறை நீண்ட மற்றும் கடினமானதாக இருந்ததாகவும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் முன் ராக்கியின் நாக்கு அளவீடுகளை இரண்டுக்கு அல்லது மூன்று முறை சாிபார்த்து பின்னர் சமர்ப்பித்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, கின்னஸ் குழுவினர் தங்கள் கால்நடை மருத்துவரான டாக்டர் பெர்னார்ட்டை ராக்கியின் நாக்கை அளவீடு செய்ய அனுப்பியுள்ளனர். அளவு எடுத்த டாக்டர், "ராக்கி சாதனைக்கு தகுதியானது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், ராக்கி 5.6 அங்குல நீள நாக்கு கொண்ட நாய் என்கிற பட்டத்துடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    • 15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லியை சேர்ந்தவர் ஷஷாங்க் மனு. இவர் டெல்லி மெட்ரோ நிலையங்களில் அதிகமாக பயணம் செய்ய விருப்பம் கொண்டவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனைக்காக குறுகிய நேரத்தில் அதிக மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து சாதனை படைக்க முயற்சி செய்தார்.

    அதன்படி, அதிகாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள புளூ லைன் பாதையில் தனது மெட்ரோ பயணத்தை தொடங்கினார். அன்று இரவு 8.30 மணிக்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்துள்ளார். அதாவது 15 மணி நேரம் 22 நிமிடம், 49 வினாடிகளில் அவர் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான சான்றிதழுடன் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
    • ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

    மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.

    இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.

    • கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், அதனை ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.

    இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி அவர் நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதற்காக தினமும் 4 மணி நேரம் தியான பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் 6 மணி நேரம் நடன பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    • சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே முந்தைய சாதனையாக இருந்தது.
    • கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் மேக்ஸ் வசமே உள்ளது.

    ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்துவதே இந்த ரூபிக் கியூப் விளையாட்டு. மாறி மாறி உள்ள கனசதுர கட்டங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்து வயதினரும் சாதனைகளை படைத்துவருகின்றனர்.

    அந்த வகையில், கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 3x3x3 ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு மிக வேகமாக தீர்வு கண்டு, "ஸ்பீட்கியூபிங் லெஜண்ட்" என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் (வயது 21) உலக சாதனை புரிந்தார்.

    இந்த வகை ரூபிக்ஸ் கியூபை சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு என்பவர் கடந்த 2018ம் ஆண்டில் 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே உலக சாதனையாக இருந்தது. மேக்ஸ் 3.63 வினாடிகளில் தீர்வு கண்டு இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மேக்ஸ் 3.13 வினாடிகளில் புதிருக்கு தீர்வு கண்டு முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

    அவர் உலக சாதனையை முறியடித்த நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அதில் அவரது சக கியூப் தோழர்கள் அவரை உற்சாகப்படுத்துவதைக் காணலாம்.

    ஸ்பீட்கியூபிங் போட்டிகளில் மேக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் அவர் வசமே உள்ளது எனலாம்.

    கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலின்படி 4x4x4 கியூப், 5x5x5 கியூப், 6x6x6 கியூப் மற்றும் 7x7x7 கியூப்  ஆகியவற்றிற்கான ஒற்றை-தீர்வு மற்றும் சராசரி-தீர்வு உலக சாதனைகளை மேக்ஸ் படைத்திருக்கிறார்.

    3x3x3 கியூப் புதிருக்கான சராசரி சாதனையை போலந்து நாட்டின் டைமன் கோலாசின்ஸ்கியுடன் இணைந்து தக்க வைத்திருந்தார். இதற்கு இவர் எடுத்து கொண்ட நேரம் 4.86 வினாடிகள். இந்த சாதனையை 4.69 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் யிஹெங் வாங் 2023 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முறியடித்தார்.

    ஆட்டிஸம் எனப்படும் ஒரு விதமான் மன இறுக்க நோயால் பாதிக்கபட்ட மேக்ஸிற்கு, இந்த ஸ்பீட்கியூபிங் ஒரு நல்ல சிகிச்சை  என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். "ஒரு காலத்தில் மேக்ஸால் தண்ணீர் பாட்டில்களை கூட திறக்க முடியவில்லை. ஆனால் அவர் ரூபிக்ஸ் கியூப்களை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார்," என்றும் அவர்கள் கூறினர்.

    • அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது.
    • தற்போதைய சாதனையை கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம் உறுதி செய்தது.

    கொழும்பு:

    இலங்கையின் ராணுவ மருத்துவர்கள் குழு, உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உலக சாதனை படைத்திருக்கின்றனர். இதுவரை இந்திய மருத்துவர்கள் 2004ம் வருடம் அகற்றியிருந்த கல்தான் மிகப் பெரியதாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில், கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒரு நோயாளிடமிருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

    கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது. அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இலங்கையின் தற்போதைய சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல், கடந்த 1-ம் தேதி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    • இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.
    • ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள்.

    அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது. ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் கூறுகையில், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.

    நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்றனர். மேலும் ஜோயி பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புவதாகவும், குளிப்பதை வெறுப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறினர்.

    • ஜேமி மெக்டொனால்ட் முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
    • சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

    லண்டன்:

    சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், உலக சாதனைகளை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    ஜேமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார். ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.

    இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரெயில்கள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

    மெக்டோனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்தது. சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் நோக்கம் ஆகும். 

    • தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
    • மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

    அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.

    அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-

    நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது.
    • ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர்.

    சென்னை:

    ஜனவரியில் சென்னை ஹூப்பரில் இருந்து புறப்பட்ட மூன்று மாணவிகள் மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா (14) லண்டனில் உள்ள கின்னஸ் தலைமையகத்தை அடைந்தனர். இவர்களின் இலக்கு ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனைபடைப்பதாகும்.

    சாதனை படைக்க களமிறங்கும் முன்பு வரை மூன்று மாணவிகளும் ஒருவித பயத்துடனே காணப்பட்டனர், எனினும் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அலுவலர்கள் முன்- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

    கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது. எனினும், இவர்கள் சவாலை மன உறுதியுடன் எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களை வழிநடத்தும் ஒரே சக்தி இதுவாகவே இருந்தது. மதிய வேளை துவங்க இருந்த சமயத்தில், அதிகாரப்பூர்வ பட்டமளிப்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் கிரேக் கிளெண்டே தலைமையில் நடைபெற்றது.

    ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்திய மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா ஆகிய 3 பேரும் முதல் முயற்சியில் மொத்தம் 6 கின்னஸ் சாதனைகளை முறியடித்தனர்.

    ஆனாலும், முயற்சியை கைவிடாத குழுவினர் மீண்டும் போட்டியில் பங்கேற்றனர். அப்போது, ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர். சாதனைபடைத்த மமதி, பாலசரணிதா பாலாஜி, ஜணனி ஆகிய 3 பேருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

    • மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப், அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்துள்ளார்.
    • சீயோன் கிளாக்கின் சாதனை குறித்த வீடியோவை சமீபத்தில் கின்னஸ் சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது

    அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின் உலக சாதனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த மிஸ்டர் கிளார்க், தனது விடா முயற்சியால் தடகளத்தில் சாதனை படைத்து வருகிறார். கால்கள் இல்லாத நிலையில் கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சியை மேற்கொண்ட அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இந்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ள கின்னஸ் சாதனை அமைப்பு, 'இரண்டு கைகளில் வேகமாக நடக்கும் மனிதரான சீயோன் கிளார்க்கை பாருங்கள்' என கூறியிருந்தது.

    அதேபோல் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜிம்மில் மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப் மற்றும் அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உலக சாதனையை முறியடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சீயோன் கிளார்க்.

    • கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளார்.
    • உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.

    வாஷிங்டன் :

    உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார்.

    அதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார் எலான் மஸ்க்.

    அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைகொண்டு வந்ததால் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்ததாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.

    இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தநிலையில், தற்போது அது 137 பில்லியன் டாலராக (சுமார் ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) அவர் இழந்துள்ளார்.

    உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.

    ×